திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருநின்றவூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

Update: 2019-06-29 23:44 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் அனந்தநாராயணன் (வயது 42). பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் அருகில் இவரது வீடு உள்ளது. இவர் பூந்தமல்லி பகுதியில் குளிர்பான மொத்த வியாபாரியாக உள்ளார். இவரது மனைவி ஜோதி. அருகில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜோதி பள்ளிக்கு சென்று விட்டார். அனந்தநாராயணன் வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியில் உள்ள கிரில் கேட்டில் ஒரு சிறிய பூட்டை பூட்டி விட்டு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை திருட்டு

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அனந்தநாராயணன் திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்