மயிலாப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

மயிலாப்பூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் ஆறாக தண்ணீர் ஓடியது.

Update: 2019-06-29 23:35 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் 125-வது வார்டுக்கு உட்பட்ட தேரடி தெருவில் நேற்று காலை சாலையின் கீழே அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இந்த குடிநீரை சிலர் சிறு, சிறு பாத்திரங்கள் மூலம் குடங்களில் நிரப்பி சென்றனர்.

அந்த பகுதிக்கான குடிநீர் வாரிய அலுவலக தொலைபேசி எண் தெரியாததால், இதுகுறித்து யாரிடம் தகவல் அளிப்பது என பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஒரு வழியாக சிலர் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த குடிநீர் வாரிய பணியாளர்கள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்தி விட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு

குடிநீர் குழாய் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக தண்ணீர் வெளியேறியதாகவும், அதனை தற்போது சரி செய்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு தான் அந்த பகுதியில் குடிநீர் வாரிய பணியாளர்கள் பள்ளம் தோண்டி பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்க அரசும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இதுபோன்று குடிநீர் வீணாகும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய குடிநீர் வாரிய தொலைபேசி எண்களை அனைவரின் பார்வைக்கும் படும்படி ஆங்காங்கே வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்