சென்னையில் வெவ்வேறு சம்பவங்கள்: தண்ணீர் லாரி மோதி 3 பேர் பலி

சென்னையில் 3 வெவ்வேறு இடங்களில் தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-06-29 23:35 GMT
பூந்தமல்லி, 

சேலத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 65). இவர், மதுரவாயல் மதுரா கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்றுவிட்டு நேற்று காலை ரெயில் மூலம் சென்னை வந்தார்.

பின்னர் பஸ்சில் மதுரவாயல் வந்திறங்கிய அவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் ரேஷன் கடை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி முத்துலட்சுமி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் முரளிமோகன் (41) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூர்

அம்பத்தூர் புதூர், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ராஜா(64). இவர், தனது நண்பரான டேவிட் ஜெயசீலன்(69) என்பவருடன் நேற்று மாலை அம்பத்தூர், ஆவின் பால் பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் தண்ணீர் ஏற்றி வந்த லாரி, ராஜா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் டேவிட் ஜெயசீலன், காயமின்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் நிசார் அலி(30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

வியாசர்பாடி

வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்தவர் அஜித்குமார்(19). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அஜித்குமார் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்