104 மரங்கள் விழுந்தன; வாகனங்கள் சேதம் 2-வது நாளாக பலத்த மழை மும்பை-புனே ரெயில்கள் ரத்து
மும்பையில் 2-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மும்பை - புனே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை,
மும்பையில் சுமார் 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மழைகாரணமாக மும்பையில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பல இடங்களில் மரம் மற்றும் சுவர் இடிந்து அந்த வழியாக நடந்து சென்றவர்கள், வாகனங்கள் மீது விழுந்தது. மேலும் பல்வேறு சம்பவங்களால் பலர் காயமடைந்து இருந்தனர்.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. காலை இடைவிடாமல் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல தொடர் மழையால் பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் 39 இடங்களில் மின்கசிவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், 104 இடங்களில் மரங்கள் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவண்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். சயான் கோலிவாடா பஞ்சாப் கேம்பில் மரம் விழுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் சேதமடைந்தன.
இதேபோல மழை காரணமாக மத்திய ரெயில்வே சில ரெயில்சேவைகளை ரத்து செய்து உள்ளது. இதில் மும்பை - புனே பிரகதி எக்ஸ்பிரஸ், மும்பை - புனே சின்காத் எக்ஸ்பிரஸ், புசாவல் - மும்பை பயணிகள் ரெயில், புனே - பன்வெல் பயணிகள் ரெயில்கள் நேற்றும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை - புசாவல் பயணிகள் ரெயில் சேவை நாளை (திங்கட்கிழமை) வரை ரத்து செய்யப்பட்டுள்து.
நேற்று மும்பை நகர் பகுதியில் 81.2 மி.மீ. மழையும், புறநகரில் 234.8 மி.மீ. மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.