குடிசைவாசிகளுக்கு 3 ஆண்டு வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் கேப்டன் தமிழ்ச்செல்வன் கோரிக்கையை ஏற்று முதல்-மந்திரி உத்தரவு

எஸ்.ஆர்.ஏ. திட்டப்பணிகளை செய்யும் கட்டுமான அதிபர்கள் குடிசைவாசிகளுக்கு 3 ஆண்டு வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-29 22:15 GMT
மும்பை,

மும்பையில் குடிசை சீரமைப்பு ஆணையம் (எஸ்.ஆர்.ஏ.) குடிசை பகுதிகளை சீரமைத்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதில் எஸ்.ஆர்.ஏ. திட்டப்பணிகளில் ஈடுபடும் கட்டுமான அதிபர்கள் குடிசைகளில் இருந்து காலி செய்யப்படும் மக்களுக்கு கட்டிடம் கட்டி முடித்து வீடு வழங்கும் வரை வாடகை கொடுக்க வேண்டும்.

ஆனால் பல கட்டுமான அதிபர்கள் சீரமைப்பு பணிக்காக காலி செய்யப்படும் குடிசைவாசிகளுக்கு முறையாக வாடகை வழங்குவதில்லை. இதுதவிர எஸ்.ஆர்.ஏ. திட்டப்பணிகளில் ஈடுபடும் கட்டுமான அதிபர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே கட்டுமான அதிபர்கள் காலி செய்யப்படும் குடிசைவாசிகளுக்கு முறையாக வாடகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய காலத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்காத கட்டுமான அதிபர்களை மாற்ற குடிசைவாசிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பேசினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், குடிசை சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் கட்டுமான அதிபர்கள் 3 ஆண்டுகளான வாடகை பணத்தை முன்கூட்டியே குடிசைவாசிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

ஒரு திட்டத்தில் ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் கட்டுமான அதிபருக்கு சிறிய தொகையை வாடகையாக டெபாசிட் செய்வதில் கஷ்டம் இருக்காது. இதனால் பின்னாளில் குடிசைவாசிகள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசி னார்.

மேலும் செய்திகள்