பெற்றோர் கண்டித்ததால் கோபம்: புதுவையில் தவித்த பெங்களூரு சிறுவன் மீட்பு

பெற்றோருக்கு தெரியாமல் புதுவை வந்து தவித்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.;

Update: 2019-06-29 22:30 GMT
புதுச்சேரி,

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி ஸ்ரீமிதா. இவர்களது மகன் ரேயான் (வயது 12). இவன் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரேயான் படிப்பில் சரியாக அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுவன் ரேயான் நேற்று முன்தினம் பள்ளிசீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். ஆனால் அவன் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி ஓசூருக்கு வந்துள்ளான்.

கையில் இருந்த காசு செலவாகி விடவே அங்கு டீக்கடை வைத்திருந்த ஒருவரிடம் புதுச்சேரியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாகவும், காசு செலவாகிவிட்டதால் பணம் தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் ரூ.250 கொடுத்தாராம்.

அதை வாங்கிக்கொண்ட ரேயான் பஸ் ஏறி புதுவை வந்துள்ளான். நேற்று மாலை புதுவை வந்த அவன் வேறு எங்கும் செல்ல தெரியாமல் பஸ் நிலையத்திலேயே சுற்றி திரிந்துள்ளான்.

இரவு நேரத்தில் பள்ளிசீருடையுடன் பஸ் நிலையத்தில் திரிந்த அவனை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் அவன் பெற்றோருக்கு தெரியாமல் புதுவை வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவனது பெற்றோர் குறித்த விவரங்களை சேகரித்த போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவித்து புதுவை வர செய்தனர். அதன்பின் சிறுவன் ரேயனை அவர்களோடு அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்