மணல் திருட்டை தடுக்க அரிக்கன்மேட்டில் பள்ளம் தோண்டி பாதையை தடை செய்த போலீஸ்

அரிக்கன்மேடு பகுதியில் இருந்து மணல் திருடப்பட்டு கடத்தப்படுவதை தடுக்க மணல் கடத்திச்செல்லப்படும் பாதையில் பள்ளம் தோண்டி பாதையை போலீசார் தடை செய்தனர்.

Update: 2019-06-29 22:00 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர், திருக்கனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மணல் திருடப்பட்டு கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடு்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் வில்லியனூரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மணல் திருட்டில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர். மேலும் 27 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர் நடவடிக்கையாக அரியாங்குப்பத்தை அடுத்த அரிக்கன்மேடு பகுதியிலும் மணல் திருட்டு மற்றும் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இருந்த போதிலும் மணல் கடத்தலை நிரந்தரமாக தடுக்கும்பொருட்டு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் உத்தரவின்பேரில் போலீசார் மணல் கடத்தல் பாதையை தடுக்க அந்த பாதையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆங்காங்கே பள்ளம் தோண்ட நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ராஜன் மற்றும் போலீசார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரிக்கன்மேட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பின்புற பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் பாதையில் 3 இடங்களில் சுமார் 4 அடி ஆழத்துக்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

மேலும் அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபடவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்