திருச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் ரூ.25 கோடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் தகவல்

திருச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் ரூ.25 கோடி மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

Update: 2019-06-29 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசின் விலையில்லா மடிக்கணினி பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுக்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் 20,436 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

2019-20-ம் ஆண்டுக்கான மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு தொகுதிக்கு நேற்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு 3,015 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் 3,015 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 70 லட்சத்து 3 ஆயிரத்து 100 மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகம் மிகவும் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. பல்வேறு துறைகளும் நவீன மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளன.

வளர்ந்த நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்து கற்றல் கற்பித்தல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பாடப்புத்தகங்களே மாணவர்களுக்கு சுமையாக இருந்த நிலைமாறி அந்நூல்களுக்குள் மின்னணு நூல்களை தாங்கிச்செல்கின்ற உத்தி, புதிய பாதையை உலகிற்கே காட்டியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 147 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 20,436 மடிக்கணினிகள் ரூ.25 கோடியே 8 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகின்றன. மேலும் முந்தைய ஆண்டில் விடுபட்ட மாணவர்களுக்கும் முழுமையாக மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.17 கோடியே 52 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் 47,208 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களும், 9 லட்சத்து 15 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 52,221 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப்பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்