மணமேல்குடி பகுதியில் வரத்து குறைவால் விலை குறையாத மீன்கள் அசைவ பிரியர்கள் ஏமாற்றம்

மணமேல்குடி பகுதியில் வரத்து குறைவால் மீன்கள் விலை குறையவில்லை. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Update: 2019-06-29 22:45 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவா சத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களும், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மேலும் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். மணமேல்குடியிலும் மீன் மார்க்கெட் உள்ளது.

வரத்து குறைவு

இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மீன்களின் வரத்து மிகவும் குறைந்ததால், விலை உயர்ந்தது. கடந்த 15-ந் தேதியுடன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இதனால் விசைப்படகு மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்றனர். இதில் விசைப்படகு மீனவர்களின் வலைகளில் இறால் மற்றும் நண்டுகள் அதிக அளவில் சிக்குகின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளில் நண்டுகள் அதிக அளவில் சிக்குகின்றன. ஆனால் போதிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை.

இதனால் கட்டுமாவடி மற்றும் மணமேல்குடியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் மற்றும் இறால்களின் விலை குறையவில்லை. நண்டு வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. மீன்பிடி தடை காலத்தில் ஒரு கிலோ நண்டு 300 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு கிலோ நண்டு 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

விலை குறையவில்லை

ஆனால் மீன்கள் வரத்து குறைந்ததால் தடைகாலத்தின்போது விற்கப்பட்ட விலையிலேயே தற்போதும் மீன்கள் விற்கப்படுகின்றன. அதன்படி ஒரு கிலோ செங்கனி மீன் ரூ.400, முரல் மீன் ரூ.250, கெண்டை மீன் ரூ.250, பாறை ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட இறால் விலை சற்று குறைந்து ரூ.250-க்கு விற்கப்படுகிறது. மீன்கள் வரத்து அதிகமானால் விலை குறைய வாய்ப்பு உள்ளது, என்று மீனவர்கள் கூறினர்.

மீன்பிடி தடைகாலத்தின்போது மீன்கள் விலை அதிகரித்ததால், நடுத்தர மக்கள் மற்றும் அசைவ பிரியர்கள் அதிக அளவில் மீன்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. தடைகாலம் முடிந்ததால் மீன்களின் விலை குறையும் என்று அசைவ பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் மீன்கள் விலை குறையாததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் செய்திகள்