கறம்பக்குடியில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கறம்பக்குடியில் குடிநீர் குழாய் உடைந்ததால் பல நாட்களாக குடிநீர் வெளியேறி சாலையில் ஓடி வீணாகிறது. அந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-29 22:45 GMT
கறம்பக்குடி,

கறம்பக்குடி பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 15 வார்டுகளுக்கும் அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் கிடைக்கிறது. ஆனால் மேட்டுப்பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. கறம்பக்குடி அக்ரஹாரம், செட்டியார் தெரு, பள்ளிவாசல் தெரு, சுலைமான் நகர், சடையன் தெரு போன்ற பகுதிகளில் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் உள்ள குழாயில் இருந்தே பாதுகாப்பற்ற நிலையில் பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் சாலையின் நடுவே பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து பீறிட்டு வெளியேறும் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. குழாய் உடைந்து பல நாட்களாகியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் சாலையிலும் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது.

கறம்பக்குடி பகுதியில் குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிந்து சிரமப்படும் நிலையில், பல நாட்களாக சாலையில் குடிநீர் வீணாவது மக்களை வேதனைப்பட செய்து உள்ளது. எனவே கறம்பக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். குடிநீரை சீராக வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்