கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே செல்போனில் பேசியதை தலைமை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-29 23:00 GMT
கள்ளக்குறிச்சி, 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அணைகரைகோட்டாலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காவாயி. இவர்களுடைய மகள் கீர்த்திகா (வயது 16). இவர் தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதற்காக அவர் பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

கடந்த சில நாட்களாக கீர்த்திகா பள்ளி வகுப்பறையிலும், விடுதியிலும் வைத்து செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியருக்கு புகார் சென்றது.

இதனால் கீர்த்திகாவை, தலைமை ஆசிரியர் கண்டித்ததோடு, பெற்றோரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருமாறு கூறினார். இதில் மனமுடைந்த கீர்த்திகா நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீர்த்திகாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பேசியதை தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்