கோபால்பட்டி அருகே பரபரப்பு: அய்யனார் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு

கோபால்பட்டி அருகே அய்யனார் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-29 23:15 GMT
கோபால்பட்டி,

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியை அடுத்த அய்யாபட்டிகோம்பைபட்டி சாலையோரத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கோம்பைபட்டி ஊராட்சியில் உள்ள 7 கிராம மக்கள் சேர்ந்து கோவில் திருவிழாவை நடத்துவார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மண்ணால் ஆன அய்யனார், சின்னக்கருப்பு, பெரியகருப்பு, விநாயகர் உள்ளிட்ட 5 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். அதிலும் குறிப்பாக சாமி சிலைகளின் கைப்பகுதியை துண்டித்தனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிலைகள் உடைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலிலும் மர்மநபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். இதுமட்டுமின்றி உண்டியலுக்கு தீ வைத்து விட்டு அவர்கள் தப்பி சென்றனர். இந்த 2 சம்பவங்களிலும், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களால் கோபால்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்