குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் தீயில் கருகி சாவு

குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர் தீயில் கருகி உயிரிழந்தார்.

Update: 2019-06-29 22:30 GMT
குமாரபாளையம், 

குமாரபாளையத்தில் உள்ள அப்பன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). விசைத்தறி உரிமையாளர். இவருக்கு சொந்தமாக புத்தர் வில்தெருவில் விசைத்தறி கூடம் உள்ளது. இங்கு 14 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத் தறியில் சுழற்சி அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தொழிலாளர்கள் விசைத்தறி கூடத்திற்கு வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தபோது விசைத்தறி கூடத்தில் தீ எரிந்ததுடன், புகை மூட்டமாகவும் காணப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு விசைத்தறி கூடத்திற்குள் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக சரவணன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் குமாரபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனணத்தனர்.

அதன்பின் தீயில் கருகிய சரவணன் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்