பரமத்திவேலூர் அருகே வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து டிரைவர் சாவு மனைவி கண்முன்னே பரிதாபம்

பரமத்திவேலூர் அருகே வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து மனைவி கண்முன்னே டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-06-29 21:30 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 52). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகன் சதீஷ். நேற்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கிருஷ்ணகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில் கிருஷ்ண குமார் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டின் முதல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார். அவருக்கு உதவியாக சுமதியும் உடன் சென்றார்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் தண்ணீர் தொட்டியை உள்ளே இறங்கி சுத்தம் செய்து விட்டு மேலே ஏறினார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கால் இடறி கீழே விழுந்து விட்டார். இதைப்பார்த்து சுமதி "அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள்" என சத்தம் போட்டுக்கொண்டு கீழே இறங்கி ஓடினார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர்.

சுமதி வந்து பார்த்தபோது கிருஷ்ணகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதனால் சுமதி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதை அங்கிருந்தவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கண்முன்னே கணவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்