முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் ரூ.50 ஆயிரம் சமூக நலத்துறை அலுவலர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் அந்த குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார்.

Update: 2019-06-29 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏழை தம்பதிகளுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு 5 முதல் 10 குழந்தைகள் வரை பிறந்தது. இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் அனைத்து தரப்பினருக்கும் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஏழை தம்பதிகள் 2 அல்லது 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டனர். இந்த நிலையில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு அந்த குழந்தைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு திட்டம் தான் '2 பெண் குழந்தைகள் திட்டம்' இந்த திட்டத்தின்படி முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் தம்பதியினர் குடும்ப கட்டுப்பாடு செய்தால் அந்த குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக செலுத்தப்படும்

பின்னர் அந்த குழந்தைக்கு 18 வயது நிரம்பியதும் வைப்புநிதியாக செலுத்தப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் வட்டித்தொகை கிடைக்கும். அதேபோல் 2 பெண் குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்தால் 2 குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதியாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் தம்பதி 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் குழந்தைக்கு 3 வயது நிறைவடைவதற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். தம்பதியினரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும்.

தம்பதிக்கு ஆண் வாரிசு இல்லை, அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்யப்பட்டது உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்