ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை

ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-06-29 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஆகியவற்றின்படி, குழந்தைகள் இல்லங்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றியும், சட்டத்திற்கு புறம்பான தத்தெடுத்தலை தடுப்பது குறித்தும், விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பேசுகையில், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களில் குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

மேலும், குழந்தைகள் நலக்குழுமத்தின் அத்தியாவசிய பணிகள் குறித்தும், மாவட்டத்தில் அனைத்து துறையினருடன் இணைந்து குழந்தைகளது பாதுகாப்பினையும், உரிமைகளையும் நிலைநாட்டுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழுமத்தினர், அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்