கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல் பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-29 22:15 GMT
வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் கலையரசி (வயது 28). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் சக்தி நகர் வடக்கு காடு பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜோதிவேல் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும், கலையரசிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மணிகண்டன், கலையரசி மற்றும் அவருடைய 2 மகன்களையும் கூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஜோதிவேல் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்களை சென்னையில் வைத்து போலீசார் மீட்டனர். கலையரசி தன் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடந்த 26-ந் தேதி மீண்டும் கலையரசியும், மணிகண்டனும் கோவை சென்று குடும்பம் நடத்தி வந்தனர். இதையறிந்த தந்தை செல்வம் மகளை பிரிப்பதற்காக மணிகண்டனின் தந்தை விவசாயி பழனியப்பனுக்கு போன் செய்தார். அப்போது உன்னுடைய மகன் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் இருப்பதால், அங்கு வருமாறு தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தனது மகனை அழைத்து செல்ல காரில் உறவினருடன் அத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தனர். இவர்களை செல்வம், அவருடைய மகன் பூவரசன் (23) மற்றும் கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (25), அத்தனூர் அரண்மனை சாவடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் பழனியப்பன் வந்த காரினை அடித்து சேதமாக்கினர். மேலும் பழனியப்பன் (52) மற்றும் அவருடைய உறவினர் அன்பரசு (42) ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் செல்வம், பூவரசன், விக்னேஸ்வரன், ராஜ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்