அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2019-06-29 22:45 GMT
கீழ்வேளூர்,

நாகையை அடுத்த பொரவாச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு, ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில்தான் கிராம பஞ்சாயத்துக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. உலகில் வேறு எங்கும் கிராம பஞ்சாயத்துக்கள் கிடையாது. இந்த பஞ்சாயத்து மூலமாக செயல்படுகின்ற திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சென்று அடைவதை கண்காணிப்பதற்காகத்தான் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

நலத்திட்டங்கள்

கிராம மக்கள் அனைவரும் கிராம முன்னேற்றத்திற்காக கிராம சபை கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இது உங்களுடைய உரிமை, கடமை என்பதை உணர வேண்டும்.

தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகர், தாசில்தார் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செபஸ்டியம்மாள், வெற்றிச்செல்வன் உள்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்