சேலத்தில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை கள்ளக்காதலன் வெறிச்செயல்
சேலம் கொண்டலாம்பட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி,
சேலம் வண்ணார கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கும் கேரளாவை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கணவர் சாமிநாதனுடன், முனியம்மாள் கொண்டலாம்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முனியம்மாளுக்கும், அவருடன் வேலை செய்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்குமார்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
பின்னர் முனியம்மாள் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வண்ணார கொண்டலாம்பட்டியில் கள்ளக்காதலன் செந்தில்குமாருடன் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும், ஒருவரின் நடத்தையில் மற்றொருவர் சந்தேகம் அடைந்து பேசிக்கொண்டதால் தகராறு முற்றியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்து விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் முனியம்மாள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
உடனே செந்தில்குமார் முனியம்மாளின் உடலை யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள சேலம்-கரூர் ரெயில்பாதையில் கொண்டு வந்து போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்த பெண் முனியம்மாள் என்பதும், அவரை ெசந்தில்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்து ரெயில் தண்டவாளத்தில் வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து முனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலனால் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.