ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் வயதான தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
ஓசூர்,
ஓசூர் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளியில் இருந்து சர்ஜாபுரம் செல்லும் சாலையில் உள்ளது இண்டளபள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனிரெட்டி. இவரது மனைவி ஜெயம்மா. இவர்களது வீட்டுக்கு கடந்த 21-ந் தேதி, ஒரு வாலிபர் கட்டிட வேலைக்காக வந்தார். பின்னர் அந்த நபர் முனிரெட்டியிடம் முன்பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் முனிரெட்டி மற்றும் ஜெயம்மாவை இரும்பு கம்பியால் தாக்கினார். மேலும் வீட்டில் இருந்த 80 கிராம் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம்ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடி விட்டார். இதில் காயம் அடைந்த முனிரெட்டி தம்பதியரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் வயதான தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்தது தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 32) என்பதும், கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இவர் மீது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.