சாதி ஆணவ படுகொலையை கண்டித்து சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி 9 பேர் கைது
சாதி ஆணவ படுகொலையை கண்டித்து சேலத்தில் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிபாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 22). இவர், அதே பகுதியில் வசித்து வந்த வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன், கனகராஜ் மற்றும் சிறுமியை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார்.
இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோல், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்து விட்டார். இந்த சாதி ஆணவ படுகொலைக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், மேட்டுப்பாளையம் அருகே நடந்த சாதி ஆணவ படுகொலையை கண்டித்தும், இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சாதி ஆணவ படுகொலையை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அரசு கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமையில் சிலர் நேற்று ேசலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் சாதி ஆணவ படுகொலையை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட தலைவர் சுப்ரமணி உள்பட 9 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் சமீப காலங்களில் சாதி ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.