கூடலூர் பகுதியில் மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டன

கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

Update: 2019-06-29 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை 6 மாதங்கள் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை இடை விடாது தொடர்ந்து பெய்வது வழக்கம். இந்த மழையினால் பாண்டியாறு, மாயார், சோலாடி, பொன்னானி, ஓவேலி உள்பட பல கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வனப்பகுதிகளில் ஆங்காங்கே அருவிகளில் தண்ணீர் கொட்டும்.

காலநிலை மாற்றம், வனங்களின் பரப்பளவு குறைதல் உள்ளிட்ட காரணங்களால் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் மழையின் அளவும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்து போனது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் மட்டும் மழைபெய்தது. அதன்பின்னர் கூடலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாமல் உள்ளது. காலையில் தொடங்கி மாலை வரை நன்கு வெயில் அடிக்கிறது. சில சமயங்களில் மட்டுமே மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்கிறது. இருப்பினும் வறட்சியை போக்கும் வகையில் இல்லை. இதனால் காலம் தாழ்த்தி வரும் பருவமழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இக்காலக்கட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பின்னர் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இக்காலக்கட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்து இருக்கும். கடந்த ஆண்டு கேரளாவில் பலத்த மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கம் கூடலூரிலும் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் கூடலூர் பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு வருவதால் வறட்சி நிலவுகிறது.

கூடலூர் பகுதியில் விளையும் குறுமிளகு, ஏலக்காய், காபி, கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பருவமழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே அன்னியசெலாவணியை ஈட்டும் பணப்பயிர் விளைச்சல் அதிகரிக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்

மேலும் செய்திகள்