காளப்பட்டி அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு கல்லூரி மாணவர் சாவு படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை

கோவை காளப்பட்டி அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-06-29 22:15 GMT
சரவணம்பட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோகி. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 19). இவர் கோவை காளப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் மற்றொரு கல்லூரியில் படித்து வரும் தோழியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை கோவில்பாளையத்தில் இருந்து காளப்பட்டியை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்தப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சத்தியமங்கலத்தை சேர்ந்த அஸ்வின் (18), நவீன்ராஜ் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார், அஸ்வின், நவீன்ராஜ் மற்றும் அஜித்குமாரின் தோழி ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அஸ்வின் உள்பட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக இறந்தார். நவீன்ராஜ் மற்றும் அஜித்குமாரின் தோழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்