கோவையில் பரபரப்பு: லாட்டரி சூதாட்டம் நடத்திய 2 ஏஜெண்டுகள் கைது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்

கோவையில் லாட்டரி சூதாட்டம் நடத்திய 2 ஏஜெண்டுகளை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-06-29 22:45 GMT
கோவை,

கோவை செல்வபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்களை குறி வைத்து ஆசைவார்த்தை கூறி லாட்டரி சூதாட்டம் நடப்பதாக கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணனுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்றுக்காலை செல்வபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் செல்வபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டுகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு சென்று நம்பர் லாட்டரிகளுக்கான பணத்தை பெற்றுக்கொண்டு சீட்டு எழுதிக்கொடுத்தனர். அவர்கள் 2 பேர் செல்லும் இடங்களை பின்தொடர்ந்த போலீசார் அவர்கள் யார்-யாரிடம் பணம் வாங்குகிறார்கள் என்று நோட்டமிட்டனர்.

ஒரு கட்டத்தில் தங்களை போலீசார் பின் தொடர்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட 2 பேரும் செல்வபுரம் பகுதியில் ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் சுமார் 200 மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் அவர்களை செல்வபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பேரூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 30) என்றும், செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் பாபு (38) என்றும் அவர்கள் இருவரும் லாட்டரி சூதாட்ட ஏஜெண்டுகள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.73 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் லாட்டரி சூதாட்டம் எப்படி நடக்கிறது என்பது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:- அதிகம் படிக்காதவர்களை குறி வைத்து இந்த லாட்டரி மெகா சூதாட்டம் நடக்கிறது. இதில் 2 வகை உள்ளன. ஒன்று ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம். மற்றொன்று 3 நம்பர் லாட்டரி சூதாட்டம். இதற்கென்று தனியாக ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட அன்றாடம் கூலி வேலை செய்பவர்களை தினமும் சந்திப்பார்கள். தற்போது நன்கு படித்தவர்கள் கூட இந்த சூதாட்ட வலையில் விழுந்து பணத்தை இழக்கிறார்கள். கேரளாவில் அரசு சார்பில் தினமும் லாட்டரி நடத்தப்படுகிறது. அதில் பரிசு விழும் சீட்டுக்கு அந்த மாநில அரசு பரிசு கொடுக்கிறது. ஆனால் கேரள மாநில லாட்டரி எண்ணை வைத்து கோவையில் சூதாட்டம் நடக்கிறது.

அதன்படி ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம் என்றால் கூலி தொழிலாளி ஒருவர் 15 ரூபாய் கொடுத்து ஒரு எண்ணை சொல்ல வேண்டும். அதாவது இன்று நடக்கும் கேரள லாட்டரியில் 6 இலக்க டிக்கெட்டில் கடைசி எண் 9 என்று சொல்வார். அதாவது பரிசு விழும் டிக்கெட்டின் கடைசி எண் 9 என்றிருந்தால் ஏஜெண்டு, அந்த கூலித்தொழிலாளிக்கு 100 ரூபாய் பரிசு கொடுத்து விட வேண்டும்.

இதேபோல 3 நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் கூலித்தொழிலாளர்களிடம் 345 என்று சொல்லி 60 ரூபாய் கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும். அவர் சொன்ன எண் கேரள லாட்டரி குலுக்கலில் பரிசு விழுந்த சீட்டின் கடைசி மூன்று எண்கள் 345 என்று வந்தால் கூலித்தொழிலாளிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு கிடைக்கும். அல்லது கடைசி இரண்டு எண்கள் மட்டும் வந்தால் ஆயிரம் ரூபாயும், கடைசி ஒரு இலக்கம் வந்தால் 100 ரூபாயும் பரிசாக கிடைக்கும். கூலித்தொழிலாளர்கள் பணம் கொடுக்கும் போது அவர்கள் எத்தனை சீட்டுகள் வாங்குகிறார்கள் என்று ஏஜெண்டுகள் எழுதி கொடுத்து விடுகிறார்கள். கோவையில் இப்படி ஆசையை தூண்டி நடக்கும் சூதாட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பணம் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்கள் தான் இந்த சூதாட்டத்தை நடத்துகின்றனர்.

லாட்டரி சூதாட்ட கும்பலை சேர்ந்த ஒவ்வொரு ஏஜெண்டும் தினமும் ரூ.10 ஆயிரம் வரை லாபம் சம்பாதிப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த கும்பலை சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைதாகி உள்ளனர். அவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் விரைவில் பிடிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்