நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-06-29 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்துவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி சுசீலா தலைமையில் ஆய்வாளர்கள் அனந்தகோபால், சீனிவாசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிறு சிறு மூடைகளில் சுமார் 1 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


இந்த அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்தது தெரியவந்தது. ஆனால் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனிலும் சரிவர பதில்கள் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கோணத்தில் உள்ள அரசு குடோனுக்கு அரிசி மூடைகள் கொண்டு செல்லப்பட்டன.


குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரே‌ஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால் அரிசி மூடைகளை கடத்த முயன்றவர்கள் இதுவரையும் பிடிபடவில்லை.

எனவே ரே‌ஷன் அரிசி மூடைகளை கடத்தும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்