ஈரோட்டில் பரிதாபம் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி சாவு

ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2019-06-29 23:00 GMT

ஈரோடு, 

ஈரோடு 46புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னர்சங்கர் (வயது 35). இவருடைய மனைவி அமுதா (30). இவர்கள் கட்டிட தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் கவுரி (5). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள். பொன்னர்சங்கருக்கும், அமுதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு அருகே வெள்ளாளபாளையம் பகுதியில் வீடு கட்டும் பணிக்காக அமுதா நேற்று காலை சென்றார். பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அவர் தனது மகளையும் உடன் அழைத்து சென்றார். அங்கு அமுதா கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். இதனால் கவுரி அருகில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் கவுரி எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தார். சிறிதுநேரம் கழித்து மகளை காணவில்லை என்று அமுதா தேடிப்பார்த்தார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் கவுரி மூழ்கி கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் கவுரியை அமுதா மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கவுரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்