மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை 12-ந் தேதி கூடுகிறது 11 நாட்கள் நடைபெறும்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை(சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) 11 நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
மந்திரிசபை கூட்டத்தில் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
“விவசாயிகள் எந்த பயிரை பயிரிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் சிரமமாக இருக்கிறது. வறட்சி அல்லது வெள்ளத்தின்போது, விவசாயிகள் மனு கொடுப்பார்கள். இதில் வித்தியாசம் இருக்கும். அதனால் விவசாயிகள் என்ன பயிரிடுகிறார்கள் என்பதை அறிய ஒரு செல்போன் செயலியை உருவாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் பயிரிடுவது தொடர்பான விவரங்களை சேகரிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஒரு விவசாயியை சந்தித்து ஆய்வு செய்து விவரங்களை அளித்தால் 10 ரூபாய் வழங்கப்படும். ஒருவர் ஒரு நாளைக்கு 50 விவசாயிகளின் விவரங்களை சேகரித்து வழங்க முடியும். இதற்காக ரூ.90 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் அமல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் 2.20 கோடி விவசாயிகளின் விவரங்களை முழுமையாக பெற முடியும். “பசல் பீமா” பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வசதியாக நடப்பு ஆண்டுக்கு மாநில அரசின் பங்காக ரூ.546 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் புதிதாக 72 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘நீட்‘ தகுதி தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். இதனால் கர்நாடகத்தில் மருத்துவ நிபுணர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு அவர்களின் மருத்துவ சேவையும் கிடைக்கும். மைசூருவில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் ரூ.194 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அது தற்போது ரூ.230 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கூடுதல் தொகையை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. ஹேமாவதி வலதுபுற கால்வாய் சேதம் அடைந்துள்ளதால் 92 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாயை நவீனப்படுத்த 423 கோடி நிதி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பாவகடாவில் 60 படுக்கைகள் கொண்ட மகப்பேறு ஆஸ்பத்திரி, ராய்ச்சூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பது, தாவணகெரே, பல்லாரியில் தலா 100 படுக்கைகள் கொண்ட மகப்பேறு ஆஸ்பத்திரிகளை அமைக்க ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் 26-ந் தேதி வரை(சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) 11 நாட்கள் நடைபெறும்.” இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.
மேலும் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 26 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதாவும் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 12-ந் தேதி கூட இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.