மின்வாரிய அலுவலகம் எதிரில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில் விவசாயி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-28 23:00 GMT
ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெடுவாக்கோட்டை மேலத் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது 50). விவசாயி. இவருக்கு, அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு வேண்டி செந்தமிழ்செல்வன் தட்கல் முறையில் ரூ.4 லட்சம் பணம் செலுத்தி விண்ணப்பித்தார்.

ஆனால் அவருக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான மற்றொரு ஆழ்குழாய் கிணறு மின் இணைப்பிற்கும் போதுமான மின்சாரம் கிடைக்காததால் செந்தமிழ்செல்வன் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.

இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வன் நேற்று காலை ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில் தான் கொண்டு வந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராசு மற்றும் போலீசார் தீக்குளிக்க முயன்ற செந்தமிழ்செல்வனை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக மின் இணைப்பு வழங்கவும், மற்றொரு மின் இணைப்புக்கு போதுமான மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் செந்தமிழ்செல்வனிடம் உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செந்தமிழ்செல்வனை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் ஒரத்தநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்