டாக்டர் புகார் எதிரொலி, மனித உரிமை ஆணையத்தில் அரசு ஆஸ்பத்திரி டீன் ஆஜர் - இருப்பிட மருத்துவ அதிகாரி உள்பட 3 பேர் சாட்சி அளித்தனர்
டாக்டர் புகார் எதிரொலியாக மனித உரிமை ஆணையத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் ஆஜரானார். இருப்பிட மருத்துவ அதிகாரி உள்பட 3 பேர் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
கோவை,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எலும்பு மற்றும் முடநீக்கியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர் டாக்டர் கஜேந்திரன். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி டீன் அசோகன் உத்தரவிட்டார். இது குறித்து டாக்டர் கஜேந்திரன் அன்று மதியம் டீன் அறைக்கு சென்று கேட்டார். அப்போது, அவரை டீன் அசோகன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் 2 நாட்கள் விடுமுறையில் சென்றார். இதையடுத்து ஏன் பணிக்கு வரவில்லை என்று டாக்டர் கஜேந்திரனிடம் விளக்கம் கேட்டு டீன் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. அவர் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் மருத்துவ கல்வி இயக்குனரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அந்த இடத்துக்கு வேறு ஒரு டாக்டர் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக டாக்டர் கஜேந்திரன் பலமுறை மருத்துவ கல்வி இயக்குனரை சந்தித்தும் அவருக்கு பணி வழங்கப்படவில்லை. எனவே அவர் இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அத்துடன் தான் விடுமுறை எடுத்ததற்கான சான்றுகளையும் சமர்ப்பித்தார். இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி டீன் அசோகனுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதுபோன்று டாக்டர் கஜேந்திரன் பணிக்கு வந்தாரா? என்பது குறித்து நேரில் ஆஜராகி சாட்சி அளிக்கும்படி இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், துறை தலைவர் வெற்றிவேல் செழியன், நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை கோவை வந்தனர். அவர்கள் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், டாக்டர் கஜேந்திரன் புகார் தொடர்பாக விசாரணை செய்தனர். அப்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதுபோன்று இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், , துறை தலைவர் வெற்றிவேல் செழியன், நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் ஆஜராகி, டாக்டர் கஜேந்திரன் சம்பந்தப்பட்ட நாளில் பணியில் இருந்தாரா என்பது குறித்தும் சாட்சி அளித்தனர். இந்த விசாரணை 1½ மணி நேரம் நடந்தது. அதைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த டீன் அசோகனிடம் நிருபர்கள் கேட்டபோது, டாக்டர் மீது துறை ரீதியாக எடுத்த நடவடிக்கை தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இது வழக்க மாக நடக்கக்கூடியது தான். வேறு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பாக புகார் அளித்த டாக்டர் கஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 மற்றும் 5-ந் தேதி முறையாக விடுமுறை பெற்றுதான் சென்றேன். பின்னர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டேன். ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்னை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி மாற்றி உள்ளனர். அது தொ டர்பாக நவம்பர் மாதத்தில் தான் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது நான் சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு மட்டுமல்ல கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பல டாக்டர்கள் இதுபோன்று தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால்தான் நான் நீதி கேட்டு மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தேன். எனக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.