‘பிரிட்ஜ்’ வெடித்து 3 பேர் பலியான சம்பவம் விபத்துக்கு உண்மையான காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை
‘பிரிட்ஜ்’ வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.;
தாம்பரம்,
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது 35). தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அர்ச்சனா (32). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுடன் பிரசன்னாவின் தாயார் ரேவதி (59) வசித்து வந்தார்.
மின்கோளாறு காரணமாக இவர்களது வீட்டில் இருந்த ‘பிரிட்ஜ்’ வெடித்து தீப்பிடித்தது. இதில் வீடு முழுவதும் கரும்புகை பரவியது. வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிரசன்னா, அர்ச்சனா, ரேவதி 3 பேரும் புகையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
சேலையூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 3 பேரின் உடல்களும் அடையாறில் உள்ள பிரசன்னாவின் சகோதரி மீனாட்சி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது.
தடயவியல் நிபுணர்கள் சோதனை
இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் சேலையூர் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர் சோபியா தலைமையிலான அதிகாரிகள் விபத்து நடைபெற்ற வீட்டில் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது எரிந்த ‘பிரிட்ஜின்’ பாகங்கள், பூஜை அறையில் எரிந்த நிலையில் இருந்த அலங்கார விளக்குகள், எரிந்த வயர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பொருட் களை தடய அறிவியல் சோதனைக்கு எடுத்து சென்றனர்.
உண்மையான காரணம் என்ன?
இந்த விபத்துக்கு உண்மையான காரணம் என்ன?, மின்கசிவால் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு சேலையூர் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மேலும் பிரிட்ஜ் வெடித்ததால், அதில் உள்ள குளிரூட்ட பயன்படுத்தப்படும் வாயு கசிந்து அதன் காரணமாக விஷத்தன்மை கொண்ட புகை மூட்டம் ஏற்பட்டு அதை சுவாசித்ததால் 3 பேரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே ‘பிரிட்ஜ்’ வெடித்ததால் அதன் காரணமாக தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டதா? என்பதை ஆய்வு செய்ய ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ‘பிரிட்ஜ்’ தயாரிப்பு நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்களையும் போலீசார் அழைத்து உள்ளனர். இந்த ஆய்வின்போதுதான் விபத்துக்கான உண்மையான முழு காரணமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
செல்போன் ஆய்வு
பிரேத பரிசோதனை அறிக்கையில் முதல் கட்டமாக, 3 பேரும் அதிக அளவு புகையை சுவாசித்ததால்தான் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் சுவாச குழாய்களிலும் அதிக அளவு புகை இருந்ததாகவும் டாக்டர் கள் தெரிவித்து உள்ளனர்.
விபத்து ஏற்பட்டபோது பிரசன்னா செல்போனில் உதவிக்கு யாரையாவது அழைத்தாரா? என்பது குறித்து அறிய அவருடைய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பிரசன்னா குடும்பத்தினரிடம் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.