உடன்குடியில் “ஸ்மார்ட் வகுப்பறையுடன் செயல்படும் அரசு பள்ளி” நடப்பாண்டில் ஆங்கில வழி கல்வி தொடக்கம்

உடன்குடியில் ஸ்மார்ட் வகுப்பறையுடன் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பள்ளியில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-28 23:00 GMT
உடன்குடி,

உடன்குடி கீழ புது தெருவில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடப்பு கல்வி ஆண்டில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதலாம் வகுப்பு ஆகியவற்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு குளிரூட்டப்பட்ட ஏ.சி. வசதி, புரொஜெக்டர் வசதி, கணினி வசதி, நவீன இருக்கைகள், நூலகம், மேஜைகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.

தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளும், அரசு பள்ளியில் இலவசமாக கிடைப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நடப்பு ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சுமார் 75 மாணவ-மாணவிகள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ், ஆசிரியர் மகாலிங்கம் ஆகியோர் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து ஆங்கில வழிக்கல்வியில் ஸ்மார்ட் வகுப்பறையும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்ததுடன், மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் அதிகரித்து உள்ளது.

பள்ளிக்கூடத்துக்கு தேவையான அத்தனை வசதிகளையும் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். இதேபோன்று அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கவும், வசதிகளை மேம்படுத்தவும், அந்தந்த பகுதி மக்கள் உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்