மாயமான மீனவர்கள் 7 பேரை கண்டுபிடிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்
மாயமான 7 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங்கிற்கு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் கடந்த 5-ந்தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதுவரை அவர்கள் கரை திரும்பவில்லை. ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கு கிழக்கு பகுதியில் அந்த நாட்டு படகு கவிழ்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகே மீனவர்கள் யாரும் தென்படவில்லை. இதுகுறித்து ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அவர்களை கண்டுபிடிக்க எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது கடலில் நிலவும் காலநிலையை கணிக்கும்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளான வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏதோ ஒரு நாட்டுக்கு அவர்கள் சென்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதுசம்பந்தமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதங்கள் எழுதி உள்ளது. எனவே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவர்கள் 7 பேரையும் கண்டுபிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.