ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்: பிரதம மந்திரி திட்டத்தில் பயன்பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தில் பயன்பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-28 23:15 GMT
நெல்லை,

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பெரிய விவசாயிகளும் பயன் பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. எனவே தகுதி உள்ள அனைத்து சிறு, குறு, பெரிய விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை பெறுவதற்கு தங்களது விவசாய நிலம் குறித்த பட்டா நகல் மற்றும் பிற ஆவணங்களுடன், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், செல்போன் எண் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் வாரிசு அடிப்படையிலான பட்டா மாற்றம் செய்யப்படாத இனங்களில் உரிய ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் மற்றும் தாசில்தார்களிடம் சமர்ப்பித்து பட்டா மாறுதல்கள் செய்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நிறுவன நில உடைமைதாரர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அரசியலமைப்பு பதவிகளில் இருக்கும் விவசாய குடும்பம், முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள், மாதம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம், ஓய்வூதியம் பெறுவோர், டாக்டர், என்ஜினீயர், சட்ட வல்லுனர், பட்டய கணக்காளர் உள்ள விவசாய குடும்பத்தினர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாகும்.

மேலும் செய்திகள்