கவிஞர் முத்துலிங்கம் எழுதிய புத்தகம் வெளியீடு சைதை துரைசாமி பங்கேற்பு
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
சென்னை,
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடந்தது. விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ‘தினமணி’ பத்திரிகை ஆசிரியர் கே.வைத்திய நாதன் வெளியிட, முதல் பிரதியை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் கே.பாக்யராஜ், நாஞ்சில் பி.சி.அன்பழகன், இசையமைப்பாளர் கங்கை அமரன், கவிஞர்கள் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், யுகபாரதி, காசிமுத்து மாணிக்கம், மக்கள் கவிஞர் அறக்கட்டளை தலைவர் மெய் ரூஸ்வெல்ட், ரஷிய கலாசார மைய இயக்குனர் கென்னடி எரெக்கேலோ, ‘வானதி’ ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சைதை துரைசாமி பேசுகையில், “கவிஞர் முத்துலிங்கம் மீதான அன்பாலும், தமிழ் பற்றாலும் அவரை அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தவர், எம்.ஜி.ஆர். அந்த பட்டமே பல விருதுகளுக்கு ஒப்பானது. இருந்தாலும் அறிஞர்கள் விரும்பும் வகையில் அவருக்கு தமிழக அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்யவேண்டும்”, என்றார்.