பெரியமேட்டில் தோல் வியாபாரி கடத்தல் 2 பேர் கைது
சென்னை பெரியமேட்டில் தோல் வியாபாரியை கடத்திய புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை சூளை காளத்தியப்பன் தெருவை சேர்ந்தவர் செய்யது மூசா (வயது 44). இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். பெரியமேட்டில் தோல்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்று இவருக்கு சொந்தமாக உள்ளது.
திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தோல்களை செய்யது மூசாவிடம் கொடுத்து விற்பனை செய்து தரும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதன்படி தோல்களை விற்பனை செய்த செய்யது மூசா அதுதொடர்பான ரூ.15 லட்சத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பணத்தை கொடுத்துவிட்டதாக செய்யது மூசா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 26-ந்தேதி அன்று செய்யது மூசா பெரியமேட்டில் உள்ள தனது குடோனில் உட்கார்ந்து இருந்தபோது அவரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்து தாக்கினார்கள். பின்னர் அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து பெரியமேடு ஈ.கே.தெருவில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு கடத்தி சென்றனர்.
2 பேர் கைது
அங்கு அவரை சிறை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. வெற்று காகிதங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் செய்யது மூசா விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செய்யது மூசா கொடுத்த புகாரில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜியாவுதீன் (31), சபீர் அகமது (55) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அக்ரம்கான், யூனிஸ்கான் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அக்ரம்கான் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.