தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.;

Update: 2019-06-28 22:30 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் ஒன்றியம் தித்தியோப்பனஅள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் மலர்விழி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் வேட்ராயன் ஆண்டு வரவு செலவு அறிக்கை வாசித்தார். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசு ஒழிப்பு, பசுமை வீடு பயனாளிகள் தேர்வு, ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய பணிகளை தேர்வு செய்வது, பெண்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினார்கள். கிராம நிர்வாக அலுவலர் செல்வம், கூட்டத்தில் புதுவாழ்வு திட்ட கணக்காளர் தங்கம்மாள், முன்னாள் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், சுய உதவிக்குழு பெண்கள், நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

ஒன்னப்பகவுண்டனஅள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய பற்றாளர் குணசுந்தரி, ஊராட்சி செயலாளர் சண்முகம், புதுவாழ்வு திட்ட கணக்காளர் தீபா, கிராம நிர்வாக அலுவலர் கிரு‌‌ஷ்ணன்,சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கணேசன், பாலவாடியில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் துரைசாமி, ஊராட்சி செயலாளர் ஜம்பேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலக்கியம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் செலவழித்த தொகைக்கான அனைத்து புள்ளி விவரங்களையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இலக்கியம்பட்டி ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்