புதுக்கோட்டை அருகே பரிதாபம்: ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரெயில் மோதி பலி
புதுக்கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி ரேவதி. இவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் மணிகண்டன்(வயது 19). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் நேற்று தனது நண்பர்களுடன் புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள தண்டவாளத்தின் வழியாக வரும் ரெயிலின் முன்பு நின்று செல்பி எடுக்க மணிகண்டன் முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் முன்பு நின்று மணிகண்டன் தனது நண்பர் மகேந்திரனுடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் மணிகண்டன், மகேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மகேந்திரன் படுகாய மடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து காரைக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி ரெயில்வே போலீசார் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி மோகத்தால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.