கம்பம் நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றிய, எலக்ட்ரீசியன் கை எந்திரத்தில் சிக்கி துண்டானது - ஒட்ட வைக்கும் முயற்சி தோல்வி

கம்பம் நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றிய எலக்ட்ரீசியன் கை எந்திரத்தில் சிக்கி துண்டானது. அவரது கையை ஒட்ட வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-28 23:00 GMT
கம்பம்,

கம்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என எந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து உரம் தயாரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

இந்த உரக்கிடங்கில் எலக்ட்ரீசியனாக கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த முகமது ரபீக்(வயது 35) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் எந்திரத்தை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதனுள் கை சிக்கி கொண்டது.

இதில் அவரது இடது தோள்பட்டையில் இருந்து கை முற்றிலும் துண்டானது.

இதையடுத்து உடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு துண்டான கையுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு துண்டான கையை ‘பேக்கிங்’ செய்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மதுரை மருத்துவமனையில், முகமது ரபீக்கின் துண்டான கையை மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். அப்போது துண்டான கையை குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டு வராததால் ‘செல்கள்’ இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து முகமது ரபீக்கின் கையை மீண்டும் ஒட்ட வைக்க முடியவில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகமது ரபீக் கையை இழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்