தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-28 22:45 GMT
திருமயம், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்ட அறிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன் படுத்துதல், மழை நீரை சேமிக்கும் பொருட்டு சிறிய ஊரணிகளை தூர்வாருதல் மற்றும் புதிய ஊரணிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு பஸ் வசதி, புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தொழில் தொடங்க வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும், குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாலமுரளி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜெயந்திதேவி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீரமங்கலம் அருகே உள்ள நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் திருவரங்குளம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள சுமார் 30 கிராம ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில், அந்தந்த பகுதி விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்தக் கூடாது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேலும் கொத்தமங்கலம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தின்போது, தீர்மான புத்தகத்தில், இளைஞர் மன்றத்தினரால் ஏற்கனவே தூர்வாரி சீரமைக்கப்பட்டு வரும் 9 குளங்கள், ஊரணிகளை தூர்வாரி ஆழப்படுத்தவும், வரத்துவாரிகள், வாய்க்கால்களை சீரமைக்கவும் அரசிடம் ரூ.10 கோடி நிதி கேட்டு தீர்மானம் எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து இளைஞர்கள் கேள்வி எழுப்பியபோது, 100 நாள் வேலை திட்டத்திற்காக கேட்கப்படும் நிதி என்று அதிகாரிகள் கூறினார்கள். அன்ன வாசல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மதியநல்லூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் சுருதிராணி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிங்காரவேல், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு விராலிமலை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாத்தூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பேசுகையில், எங்கள் பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேல் குடிநீர் வரவில்லை. சில பகுதிகளில் உள்ள நபர்கள் தங்களது வீட்டில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால், பொது குழாய்களுக்கு குடிநீர் வருவதில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மாத்தூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மரியம் பேசுகையில், எங்களது பள்ளிக்கு கடந்த பல மாதங்களாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் பள்ளிக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரவேண்டும், என்றார். மதயானைப்பட்டி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதேபோல அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்