குத்தாலத்தில், கடையின் ஓட்டை பிரித்து திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

குத்தாலத்தில், கடையின் ஓட்டை பிரித்து திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-28 22:30 GMT
குத்தாலம், 

நாகை மாவட்டம், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் தேவராஜன் (வயது 38). இவர், அதே பகுதியில் நோட்புக் ஸ்டோர் மற்றும் பீடா ஸ்டால் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 17-ந் தேதி இரவு வழக்கம்போல் தேவராஜன், தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறந்தார். அப்போது கடையினுள் இருந்த பொருட்கள் களைந்து சிதறி கிடந்தன. மேலும் கடையின் மேல்பகுதியில் இருந்த ஓடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பெரிய ஓட்டையும் இருந்தது. கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1,500, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு-புத்தகம், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தேவராஜன், குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பகோணம் சீதாரெட்டி தெருவை சேர்ந்த கணேஷ் (43) என்பவர் குத்தாலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது குத்தாலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய கணேஷ், கடையில் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கணேஷ், குத்தாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது காணாமல்போன மோட்டார் சைக்கிளை ஒரு சிறுவன் திருடி சென்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது குத்தாலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அந்த சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 17-ந் தேதி இரவு குத்தாலத்தில் உள்ள தேவராஜனின் கடையின் ஓட்டை பிரித்து திருடியது இவனும், இவனது நண்பர்கள் குத்தாலம் கொத்தத்தெருவை சேர்ந்த தனபால் மகன் கலியமூர்த்தி (24), குத்தாலம் பகுதியை சேர்ந்த 16 வயது மற்றொரு சிறுவன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தி, 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் 2 சிறுவர்கள், தஞ்சை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்