திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

திருவண்ணாமலையில் பைனான்சியர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-28 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் பாலகிரு‌‌ஷ்ணன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43), பைனான்சியர். இவர் நேற்று முன்தினம் சன்னதி தெருவில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து கொண்டு வெளியே வந்தார்.

பின்னர் அவர் ரூ.60 ஆயிரத்தை தனது சட்டை பாக்கெட்டில் வைத்து விட்டு மீதமுள்ள ரூ.1 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து கொண்டு நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.

சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 மர்ம நபர்கள் சுப்பிரமணியை பின்தொடர்ந்து வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து கண்காணிப்பு பதிவுகளை வைத்து போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்