கிருஷ்ணகிரி, ஓசூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரி, ஓசூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2019-06-28 22:15 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக போதை பழக்க தடுப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரமசிவன் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்களில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டில் உள்ள போதை பொருள் பழக்கத்தை குறைக்க மருத்துவக் கல்லூரி மாணவர்களாகிய உங்களால் முடியும். போதை பொருட்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் போதை பொருட்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து நர்சிங் மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் காந்தி சாலை வழியாக ரவுண்டானா வரை சென்று திரும்பியது. முடிவில் பொறுப்பு அலுவலர் கோபி நன்றி கூறினார்.

ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவர்களுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ், சரவணன், விஜயகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கணே‌‌ஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி தலைமை ஆசிரியர் முனிராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்