ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவிப்பதா? துரைமுருகனுக்கு, ஏ.சி.சண்முகம் கண்டனம்
ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று துரைமுருகனுக்கு, ஏ.சி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
வேலூர்,
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக ஒன்றிய அளவில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் வருகிற 7–ந் தேதி வரை நடக்கிறது.
அதேபோன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒருதொகுதிக்கு 110 மாணவர்கள் வீதம் 660 பேருக்கு சென்னை, பெங்களூரு, ஆரணியில் உள்ள எங்களது ஏ.சி.எஸ். கல்விக்குழுமங்களை சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் சேரவிரும்பும் மாணவர்கள் வேலூரில் உள்ள பென்ஸ்பார்க் ஓட்டலில் வருகிற 10–ந் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுசென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். அவருடைய இந்த செயல் குழந்தைத்தனமாக இருக்கிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னக்கு குடிநீர் கொண்டுசெல்லக்கூடாது என்றால், காவிரியில் எப்படி தண்ணீர் கேட்கமுடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தான் மனிதாபிமானம். ஆனால் மாவட்ட மக்களிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறார். அவர் மந்திரியாக இருந்தபோது பாலாற்றில் 10 தடுப்பணைகள் கட்டியிருக்கலாமே.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் மத்தியமந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், த.மா.க. மாவட்ட தலைவர் பழனி, புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.