தாளவாடி அருகே, தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - நேரில் பார்த்த விவசாயி அதிர்ச்சி
தாளவாடி அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான சிறுத்தை, யானை, மான் உள்பட பலவேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிலசமயங்களில் யானை மற்றும் காட்டுப்பன்றிகள் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்குள் புகுந்து பயிரை நாசப்படுத்தி வருகிறது.
தாளவாடி வனச்சரகத்தையொட்டி அண்ணாநகர் கிராமம் உள்ளது. கிராமத்தையொட்டி விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த மாதள்ளி நாயக்கர் என்பவர் தனது வீட்டில் இருந்து அருகே உள்ள விவசாய தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சிறிது தூரம் சென்றதும் தனது தோட்டத்தையொட்டி ஒரு சிறுத்தை நடமாடுவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிவிட்டார். பின்னர் இதுபற்றி அவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கும், தாளவாடி வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து வனத்துறையினரும், விவசாயிகளும் அங்கு சென்று பார்த்தனர்.
ஆனால் இருட்டாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை சிறுத்தை அங்கிருந்து சென்று இருக்கலாம் எனக்கருதினர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேற்று காலை அங்கு சென்று தோட்ட பகுதியில் பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனர். அங்கு நடமாடியது சிறுத்தை என்பது உறுதியானது. தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தை நடமாடுகிறதா? என கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்ற வேண்டாம்’ என்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.