தாதரில் உலக கோப்பை கிரிக்கெட் சூதாட்டம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது

தாதரில் உலக கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-27 22:53 GMT
மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் கடந்த 25-ந் தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியை மையமாக வைத்து மும்பை தாதர் கிழக்கில் உள்ள ரம்மி கெஸ்ட் ஹவுசில் சூதாட்டம் நடப்பதாக மாட்டுங்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, அறை எண் 706-ல் கிரிக்கெட் சூதாட்டம் நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதையடுத்து போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் ஞானேஸ்வர் கர்மதே, மிகின் சாகா(33), மனிஷ் சிங்(31), பிரகாஷ் பங்கர் என்பது தெரியவந்தது.

இவர்களில் ஞானேஸ்வர் கர்மதே பைகுல்லா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கம், 6 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதான சப்-இன்ஸ்பெக்டர் ஞானேஸ்வர் கர்மதே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்