மஞ்சள் நிற ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை அமைச்சர் கந்தசாமி தகவல்

மஞ்சள் நிற ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2019-06-27 23:15 GMT
புதுச்சேரி,

இலவச அரிசி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டசபை கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் அரசு செயலாளர் அலீஸ்வாஸ் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், பாப்ஸ்கோ அதிகாரிகள் மற்றும் அரசுக்கு அரிசி வினியோகம் செய்பவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சிவப்பு நிற ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார். பின்னர் காலதாமதமின்றி அரிசி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு 12 மாதம் இலவச அரிசி வழங்க தேவையான நிதியை வழங்கியுள்ளது. ஆனால் மக்களுக்கு இலவச அரிசி வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள், அரிசியினை தர ஆய்வு செய்யும் அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளேன். மக்களுக்கு காலதாமதமின்றி அரிசி வழங்கவும் அறிவுறுத்தி உள்ளேன். சிவப்பு நிற ரே‌‌ஷன்கார்டுதாரர்களுக்கு போன்று மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற 10-ந்தேதி காரைக்காலில் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களை சந்தித்து இலவச அரிசி, முதியோர் பென்‌‌ஷன் தொடர்பான குறைகளை கேட்க உள்ளேன். அதேபோல் புதுச்சேரியிலும் கிராமந்தோறும் சென்று குறைகேட்க உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

பின்னர் நிருபர்கள் அமைச்சர் கந்தசாமியிடம் பேட்கோ நிதியை அலுவலக தேநீர் செலவுக்கு பயன்படுத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, என்னிடம் மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் பல துறைகள் உள்ளன. அதனால் என்னை சந்திக்க மக்கள் அதிகம் வருகின்றனர். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு தேவையான டீ, பிஸ்கெட் வாங்கி கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் செய்துள்ளோம். மக்களுக்குத்தான் அவை வாங்கப்பட்டது. அந்த நிதியை நான் வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. இது மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்.

மேலும் செய்திகள்