திருவெண்ணெய்நல்லூர் அருகே, முத்துமாரியம்மன் கோவிலில் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் தாலி சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி கங்கைநாதன் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவில் கதவை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறப்பதற்கு கங்கைநாதன் வந்தபோது, கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் மற்றும் சாமி சிலைகளின் மீது இருந்த 2 பவுன் எடையுள்ள 4 தாலி சங்கிலிகள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் மதுபாட்டில்களும் கிடந்தன.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி னர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் மற்றும் தாலி சங்கிலிகள் ஆகியவற்றை கொள்ளையடித்ததோடு கோவில் வளாகத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.