புதுப்பேட்டை, சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் சிக்கியது
புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் சிக்கியது. இது பற்றிய விவரம் வருமாறு:-
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜசிங் தலைமையிலான போலீஸ் படையினர் நேற்று மாலையில் திடீரென வந்தனர். அவர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்புற கதவை பூட்டிக்கொண்டு அறைகளில் சோதனை நடத்தினார்கள். மாலை 4 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்போது ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வரும் நிலையில் கணக்கில் வராமல் ரூ.53 ஆயிரம் வந்தது எப்படி? என்பது பற்றி சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோல் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள பத்திரம் விற்பனை கடைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சார் பதிவாளர் அலுவலகத்திலும், பத்திரம் விற்பனை கடைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் புதுப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.