புவனகிரி அருகே, பட்டதாரி வாலிபரை கொன்ற கள்ளக்காதலி, தாயுடன் கைது

புவனகிரி அருகே பட்டதாரி வாலிபரை கொன்ற கள்ளக்காதலி, தாயுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-27 22:45 GMT
கடலூர், 

புவனகிரி அருகே கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சீனிவாசன் (வயது 23). எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 24-ந் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே கீரப்பாளையம் ஜெ.ஜெ. நகரில் உள்ள முட்புதரில் ரத்தக்காயங்களுடன் சீனிவாசன் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கீரப்பாளையத்தை சேர்ந்த குமார் மனைவி தாமரைசெல்வி(வயது 26), இவருடைய தாய் லட்சுமி(45) ஆகிய இருவரும் நேற்று கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியிடம் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் இருவரும், சீனிவாசனை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் புவனகிரி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது தாமரைசெல்வி கூறியதாவது:-

எனது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். எனக்கும், சீனிவாசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர், அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து செல்வார். இது பற்றி அறிந்ததும் எனது கணவர் குமார், கண்டித்தார். இதனால் நான், சீனிவாசனை வீட்டிற்கு வரவேண்டாம் என்று எச்சரித்தேன். இருப்பினும் அவர் தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று இரவு எனது வீட்டிற்கு வந்த சீனுவாசனுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், எனது தாய் லட்சுமியுடன் சேர்ந்து சீனிவாசனை அடித்து கொலை செய்து, உடலை முட்புதரில் வீசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தாமரைசெல்வியும், லட்சுமியும் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்