கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லக்கூடாது ‘ஸ்கேன்’ மையம் நடத்துபவர்களுக்கு கலெக்டர் உத்தரவு

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்லக்கூடாது என ‘ஸ்கேன்’ மையம் நடத்துபவர்களுக்கு கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-27 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான செயலாக்க குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கி பேசியதாவது:-

சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்கேன்’ மையங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஸ்கேன் மையங்களில் விதிமுறைகளை மீறி கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா? என்று பாலினம் தொடர்பாக தெரியப்படுத்த கூடாது. இதனை மீறி பாலினம் தொடர்பாக தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் சுயஉதவிக் குழுக் கள், அரசுத்துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் வந்தால் இது தொடர்பான புகார்கள் மீது உடனடியாக சமூக நலத்துறை அலுவலர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள் கல்வி பயில உதவி செய்ய வேண்டும்.

மாவட்ட சமூக நல அதிகாரி திருமண தம்பதியர் களுக்கு சிறப்பு முகாம் நடத்திட வேண்டும். மேலும் பெண் குழந்தைகளை காப்பதற்கும், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டம், இரண்டு பெண் குழந்தைகளை பெற்றால் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் இந்த முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் படித்த பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ. 50 ஆயிரம் காசோலை வழங்கப்படுகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களை பாதுகாப்பதற்கு இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளதை துண்டு பிரசுரங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சமூக நலத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் இணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) சம்சாத்பேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்